இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 1500 கிலோ மஞ்சள் மற்றும் 100 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வேதாளை தெற்கு பகுதியில் வசிக்கும் சதாம் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு இருந்த 34 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ மஞ்சள், 12 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட சுறா மீன் பாகங்கள் மற்றும் 100 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சதாமை வலைவீசி தேடி வருகின்றனர்.