தமிழகத்தின் கடைசி அதாவது 234 தொகுதியான கிள்ளியூர் கன்னியாகுமரியின் கடை கோடியில் அமைந்துள்ளது. கேரளாவை கடல் மற்றும் சாலை மார்க்கமாக இணைக்கும் ஒரே ஊர் கிள்ளியூர். பழம்பெரும் தமிழ் புலவரும், தமிழ் சங்கம் வைத்திருந்தவர்களில் ஒருவருமான அதங்கோட்டாசான் குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடி உயிர் நீத்த பல தியாகிகள் கிள்ளியூரின் அடையாளமாக விளங்குகின்றனர்.
இதுவரை 11 சட்ட மன்றத் தேர்தல்களை சந்தித்துள்ள கிள்ளியூர் தொகுதியில் இதுவரை தேசிய கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜீவ் காந்தி கொலையை தொடர்ந்து நடந்த 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளைத் தவிர ஒட்டுமொத்த தமிழகத்திலும் திமுக தோற்ற போதும், அந்த கூட்டணியில் இடம்பெற்ற ஜனதா கட்சி கிள்ளியூரில் வெற்றி பெற்றது. 2016ல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேஷ்குமார் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார்.
ஆண் வக்காளர்கள் அதிகம் உள்ள கிள்ளியூரில் எதிர்வரும் தேர்தலில் 2,42,612 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் முக்கிய நகர் பகுதியான கருங்கல்லில் அனைத்து மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கைகள் ஆகும்.
15 ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் வள்ளுவிலை இடர்ப்பாடு கடற்கரை சாலையை சீரமைக்க தொகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். நெய்யாறு இடதுகரை கால்வாயில் கடந்த 15 வருடங்களாக கேரள அரசு தண்ணீர் விடாததால் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. படகுப் போக்குவரத்து நடைபெற்ற ஏரியும், கால்வாயும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
மீன்பிடித் தொழில் பிரதானமாக உள்ள இந்தப் பகுதியில் புயல் காலங்களில் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தங்குதளம், புயல் எச்சரிக்கை மையம் அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கை. கடல் அரிப்புகளால் வீடுகள் சேதம் அடைவதை தடுக்க நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தாலும் போராட்டங்கள் மூலம் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து உள்ளதாக கூறுகிறார் எம்எல்ஏ ராஜேஷ்குமார். புதிய மீன்வளக்கல்லூரி, கொல்லங்கொட்டில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கேரளாவிற்கு செல்லும் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும். 15 ஆண்டுகளாக பயன்பாடற்று கிடைக்கும் நீரேற்ற இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கிள்ளியூர் மக்களின் கோரிக்கை பட்டியல் நீள்கிறது.