விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் கோட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையானது 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கழிக்குப்பம், கூனிமேடு, அனுமந்தை, தாழங்காடு, மரக்காணம் தெற்கு சாலை ஆகிய இடங்களையும், கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியமுதலியார்சாவடி, கீழ்புத்துப்பட்டு ஆகிய பகுதிகளுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை தேர்வு செய்து அந்தப் பகுதியில் விபத்துகளை குறைப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டும். அந்த பகுதி சாலையில் பேரிகார்டு, ஒளிரும் விளக்குகள், வேகத்தடைகள், உயர் கோபுர மின் விளக்குகள், போதிய வெளிச்சம் ஏற்படுத்த தெருவிளக்குகள் ஆகிய அனைத்தையும் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதே நேரத்தில் மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனத்தில் செல்பவர்கள், சாலை விதிகளை பின்பற்றாதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். மேலும் விபத்தை குறைக்கும் வகையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது மரக்காணம் கோட்டகுப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.