கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் பேசியதற்கு மத்தியபிரதேசம் அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகாண்டில் முதல்வராக திரேந்திர சிங் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவர் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் வைத்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சிக்கலில் அவர் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்களின் உடையை பற்றி பேசி இருந்தார்.
கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும், தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர், இதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார். இதையடுத்து அவரின் கருத்தை ஆதரித்து பேசிய மத்திய பிரதேச பாஜக அமைச்சர் உஷா தாகூர் ” பெண்கள் வரம்பு மீறி நடக்கக் கூடாது, மத கட்டுப்பாடுகள், கலாச்சாரத்தைக் காக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.