கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக பரவிய தகவலுக்கு படக்குழு விளக்கமளித்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார். இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் லக் சகி படத்தில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஆதி பினிசெட்டி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டது. இதனிடையே குட் லக் சகி படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த படக்குழு, ‘குட் லக் சகி திரைப்படம் ஓடிடிக்கு செல்வதாக பரவும் தகவல் உண்மை இல்லை. விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறோம். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’ எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.