சிவகங்கை மாவட்டம் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அதில் கடந்த சனிக்கிழமை தங்கத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது. கீழடி, கொந்தகை மற்றும் அகரம் ஆகிய மூன்று இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பாக எட்டாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு சூடு மண்ணால் ஆன மனித தலை உருவம், தந்தத்தால் ஆன பகடை,காதணி மற்றும் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன. இந்த மணியின் நீளம் 5.6 சென்டிமீட்டர், மொத்த விட்டம் நான்கு சென்டிமீட்டர் ஆக உள்ளது. அதிலிருந்த துளையின் விட்டம் 1.3 சென்டிமீட்டர்,இதன் மேற்பரப்பு மெருகேற்ற பட்டு மென்மையாக காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக உள்ளன. அடுத்தடுத்து பழந்தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.