கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி மூலம் இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில், 2015ம் ஆண்டில் அகழாய்வு துவங்கியது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியைத் தொடங்கியது. 10.5 மீட்டர் ஆழம் கொண்ட 42 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 6 மாதங்கள் வரை நடந்த அகழாய்வில் 1,600 பொருள்கள் கண்டறியப்பட்டன.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று உறைகிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், சுவர்கள், சங்க கால நாணயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. பின்னர், 2016 ஜனவரி மாதம் 2ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்காலக் கிணறு, தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. இதன் மூலம், தமிழர்கள் கிமு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதும், தமிழே உலகின் மூத்த மொழி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 2017 ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட 3ஆம் கட்ட அகழாய்வில் தோல்பொருட்கள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, விளையாட்டுக் காய்கள், காதணிகள், இரும்பு உளிகள் உள்ளிட்டவை கிடைத்தன. மூன்று கட்டங்களாக நடந்த இந்த அகழாய்வு 2017ல் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை 2018ல் நான்காம் கட்ட அகழாய்வையும், 2019ல் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளையும் மேற்கொண்டது. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
இந்நிலையில் 5ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சியை 6ம் கட்ட அகழாய்வில் அறிய திட்டமிட்டு அதற்கான அகழாய்வை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களில் 6ஆம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த அகழாய்வு பணி, தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் நடைபெற இருக்கிறது.