கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான ஆய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 13ம் தேதி இந்த அகழ்வாய்வு தொடங்கியது. அங்கு தமிழர்களின் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இதுவரை நடத்தப்பட்ட ஆறு கட்ட ஆய்வுகளை விட தற்போது கிடைத்துள்ள பொருட்கள் அவற்றை விட மிகப் பழமையானவை என்பது ஒருபுறம் இருந்தாலும், இவை நவீன பயன்பாடு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னும் அந்த பகுதியில் கூடுதலாக ஆய்வு நடத்தினால் பல வியப்புகள் வெளிப்படும் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால் செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் ஆய்வை முடிப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் சில வாரங்களுக்கு அகழ்வாய்வை நீடித்து தொல்லியல் சிறப்புமிக்க பழங்கால பண்பாடுகளை கண்டுபிடிக்க முயல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.