மோடி பேசுவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டி நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது. திமுக அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. போராட்டத்தில் உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்போம்.
இந்த போராட்டத்தில் கிடைத்த வெற்றி கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்த மரண அடி என்று தெரிவித்தார். மேலும் இந்த சட்டத்தை விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை என்று மோடி கூறுவது ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று அதன் மூலமாக மட்டும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது. தமிழகத்திலேயே இதனை அதிகமாக ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்கள். இனியாவது அவர்களுக்கு புரியும்.
தேர்தலுக்கு முன்னரே தோற்றுப்போய் உள்ளோம் என்று எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த சட்டத்தை பின்வாங்கும் அறிவிப்பு. பல்வேறு நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யும் மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு முழுக்க முழுக்க அனுபவித்துக்கொண்டு தமிழக பாஜக தற்போது போராட்டம் நடத்துவது போல் கபட நாடகம் ஆடி வருகிறது” என்று சாடினார்.