சமையல் தொழிலாளி குக்கர் மூடியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி ராமச்சந்திரபுரம் தெருவில் சமையல் தொழிலாளியான பாலமுரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல் மாஸ்டரான முருகன் என்பவருடன் வெளியிடங்களுக்கு சேர்ந்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் பழைய குற்றாலம் ரோட்டில் இருக்கும் விடுதியில் இரண்டு பேரும் தங்கி சிலருக்கு சமையல் செய்து கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் பாலமுரளியும், முருகனும் ஒன்றாக அமர்ந்து மது குடித்த போது வேலை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த முருகன் குக்கர் மூடியால் பாலமுரளியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பாலமுரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுரளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.