குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த விஜய் ரூபானி நேற்று தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக எம்எல்ஏ பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் நாளை பூபேந்திர படேல் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் புதிய முதலமைச்சர் பூபேந்திர படேல் குறித்த சுவாரசியமான சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி உத்திரப்பிரதேச மாநில ஆளுநரும். குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேலின் நம்பிக்கைக்குரியவராக பூபேந்திர படேல் கருதப்படுகிறார்.
கடந்த 2014ஆம் வருடம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். இவர் அகமதாபாத் நகர்புற மேம்பாட்டு ஆணைய தலைவராகவும், அம்தவாட் மாநகராட்சி நிலைக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அகமதாபாத் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த 2017ஆம் வருடம் தனக்கு 5 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அமைச்சர்களான மன்சுக் மாண்டவியா, பர்ஷோத்தம் ரூபாலா, லட்சத்தீவு நிர்வாக அலுவலரான பிரஃபுல் கோடா படேல், குஜராத் மாநில வேளாண் துறை அமைச்சர் ஆர்.சி. ஃபால்டு ஆகியோரில் ஒருவரை அடுத்த புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், பூபேந்திர படேலை முதல்வராக தேர்வு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவருடைய தலைமையில் குஜராத்தில் அடுத்த வருடம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.