குஜராத்தில் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானனோர் காயமடைந்து தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது. மோர்பி பாலம் விபத்து நிகழ்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன் தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்திற்கு தொடர்புடைய ஒன்பது பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி சந்தித்து இன்று ஆறுதல் கூற இருக்கின்றார். இதனை முன்னிட்டு அவர் குஜராத்திற்கு இன்று வருகை புரிந்துள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ட்விட்டரில் இரண்டு ஹேஸ்டேக்குகள் இன்று மதியம் முதல் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. #go back Modi மற்றும் #Gujarat with Modi ji போன்றவற்றின் மூலமாக ட்விட்டர் பயனர்கள் தொடர்ந்து மாறி மாறி ட்வீட் செய்து வருகின்றார்கள்.
மேலும் பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டு வருவதையும் ட்விட்டர் பயனர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். குஜராத் மாடல் என்ற பிம்பம் சிதறவிடப்பட்டது எனவும் ஒரு டிவிட்டர் பயனர் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக#go back Modi என்ற ஹேஸ்டேக்குகள் குஜராத்தில் தான் அதிகம் ட்ரெண்ட் ஆகிறது என தெரிவிக்கப்படுகிறது இருப்பினும் குஜராத் மட்டுமல்லாமல் நாடு முழுவதும்#go back Modi ட்ரண்ட் ஆகியுள்ளது.
#go back Modi ட்ரென்ட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக#Gujarat with Modi ji என்ற ஹேஸ்டேக்கும் உடனடியாக ட்ரண்ட் செய்யப்பட்டு பிரதமர் மோடிக்கு ஆதரவாக மக்கள் இருப்பதாக பதிவுகள் குவிந்து வருகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் களத்திலும் பாஜகவிற்கு எதிர்ப்புகள் எழுந்து கொண்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட பிரதமரின் வருகைக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. அரசின் அலட்சிய போக்கால் 140-க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர். பாலத்தின் நிலை தெரியாமல் முறையாக சான்றிதழ் பெறாமல் பாலம் திறக்கப்பட்டது மிகப்பெரிய தவறு எனவும் தெரிவித்துள்ளனர்.