குஜராத் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினா் அதிகளவில் வசிக்கும் தகோத் மாவட்டத்தில் ரூபாய் 20,000 கோடி முதலீட்டில் மின்சாரரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் இந்த வருட இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை தகோத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு பிரதமா் பேசியதாவது “பிா்ஸா முண்டா, கோவிந்த் குரு ஆகிய பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த தலைவா்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள். இதையடுத்து நாடு சுதந்திரம் அடைந்த பின் அவா்களுக்கு உரியஅங்கீகாரம் வழங்கப்படவில்லை. அவ்வாறு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் தகோத் மாவட்டத்தில் ஒரு நீராவி என்ஜின் தொழிற்சாலை இருந்தது. நான் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன் சிலகாலம் தகோத் பகுதியில் தங்கி இருந்தேன்.
அப்போது ரயில்வே பணிமனைகள் நிறைந்திருந்த இந்தப் பிராந்தியம் தொழில் வாய்ப்பின்றி முடங்கியதைக் கண்டேன். இதையடுத்து நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் இந்தப் பிராந்தியத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என கனவு கண்டேன். அதனை நிறைவேற்றும் வகையில் இந்தப் பிராந்தியத்தில் ரூபாய் 20,000 கோடியில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறேன். இதன் வாயிலாக பழங்குடி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இந்த பிராந்தியத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவா்” என்று அவா் கூறினார். மத்திய அரசின் 100 பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் பயனடையும் நகரங்களில் தகோத் மாவட்டமும் ஒன்றாகும்.