குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தன் 2 மகள்களைக் கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஷெராவ் கிராமத்தில் இச்சம்பவம் அரேங்கேறியுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் விக்ரம் தர்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறப்பதற்கு முன்னதாக 3 மற்றும் 5 வயதுடைய 2 மகள்களுடன் தன் செல்போனில் செல்பி எடுத்து, உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவர் பகிர்ந்துள்ளார் என்று காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் அதிகாரி கூறியதாவது, அவர் பகிர்ந்த புகைப்படத்தில் விஷ பாட்டில் ஒன்றும் காணப்பட்டது. இதில் தர்ஜி தன் மகள்களுக்கு விஷம் கொடுத்து கிணற்றில் வீசியதாகவும், பிறகு தானும் அந்த விஷத்தை அருந்தி அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது அவரது மனைவி வீட்டில் இருந்ததாக அதிகாரி தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிராமமக்கள் 3 உடல்களையும் மீட்டனர். மனைவி வீட்டில் இருக்கும் போதே 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.