காட்டுயானைகள் பழங்குடியினர் கிராமத்தில் முகாமிட்டு இருப்பதால் அவற்றை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டுள்ளனர். மேலும் ஊடுபயிராக காபி செடிகளையும் பயிரிட்டுள்ளனர். தற்பொழுது பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்கியும் காபி செடிகளில் பழங்கள் பழுத்தும் இருக்கின்றது.
இதனால் காட்டு யானை கூட்டம் பழங்களை சாப்பிடுவதற்காக குஞ்சப்பனை, மாமரம், கோழிகரை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருக்கின்றது. இதனால் பொதுமக்கள், தோட்டத் தொழிலாளர்கள் அங்கு செல்ல அச்சம் அடைந்திருக்கின்றனர். ஆகையால் காட்டு யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.