கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் பிரமபுரத்தில் சேர்ந்த சி.சோமன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநலம் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. பொதுவாக குமரி மாவட்ட கோவில்களின் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய முடியாது. ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தான் பூஜைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் மாற்று மதத்தை சேர்ந்தவர். கும்பாபிஷேக விழா அரசு விழாவாக நடைபெறும் போது வழக்கமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்காமல் கோவில் புனிதm கெடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்பி.என். பிரகாஷ் ஆர். ஹேமலதா அமர்வில், இந்துக் கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் கோயிலின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள் கோயில்களுக்கு செல்லும் போது, அவர்களின் மதத்தை உறுதிசெய்வது பிரச்சனைக்கு வழிவகுக்கும். அதனை தொடர்ந்து பிரபல பாடகர் யேசுதாஸ் வேறு மதத்தை சேர்ந்தவர். இருப்பினும் அவர் ஏராளமான இந்து பாடல் பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோவிலில் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு, நாகூர் தர்காவிற்கு ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்ற குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.