குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, க.புதுப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் உத்தமபாளையம்-கம்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குழாய்கள் விரைவில் சீரமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்த பின்னரே சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியுள்ளது.