சென்னையில் பணத்தேவைக்காக கோவில் உண்டியல் மற்றும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10ஆம் தேதி அன்று நாகாத்தம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து 12ஆம் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலிலும், 15ஆம் தேதி பெருங்குடி கங்கை அம்மன் கோவிலிலும் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து கோவில்களில் நடைபெற்ற திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே கடந்த 14ஆம் தேதி கந்தன்சாவடி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்டது. அதுபற்றி வங்கி மேலாளர் புகார் அளித்தார். இதனையடுத்தே ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடைய துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் வசித்து வரும் 20 வயதுடைய வாலிபர் கார்த்திக் என்பது தெரியவந்தது.
அதன்பிறகு போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது குடிபோதைக்கு அடிமையான அந்த நபர் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்ததும், ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி செய்ய ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் கார்த்திக் போலீசாரிடம் ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “எனது பணத்தேவைக்காக கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடினேன்.
அதில் குறைவாகவே பணம் இருந்ததால், ஏடிஎம் எந்திரத்தை உடைத்து படம் எடுத்தால் அதிக அளவு பணம் கிடைக்கும் என்று நினைத்தேன். அவருக்காக சிறிய கடப்பாறையை கொண்டு ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்தேன். அதனை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டேன்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் கார்த்திக்கிடம் இருந்து உண்டியலில் இருந்து திருடப்பட்ட பணம் 2000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.