மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஆசிரியையிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணம்புதூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்விழி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மலர்விழி பள்ளி முடிந்த பிறகு வாரணவாசி சமத்துவபுரத்தில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வெளியே யாரோ கூப்பிடுவது போல சத்தம் கேட்டதால் மலர்விழி வீட்டிற்கு வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 வாலிபர்கள் வாகனத்தின் சக்கரம் சுற்றவில்லை என கூறி, அதனை தட்டுவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி தருமாறு கேட்டுள்ளனர்.
இதனையடுத்து வாகனத்தை சரி பார்ப்பது போல நடித்த வாலிபர்கள் மலர்விழியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் தண்ணீர் எடுப்பதற்காக மலர்விழி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு வாலிபர் வீட்டிற்குள் புகுந்து மலர்விழியின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து இருவரும் தப்பி சென்றனர். இதுகுறித்து மலர்விழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.