ஆவடி அடுத்த பருத்திப்பாட்டு சாந்தா டவர் சி -பிளாக்கில் ரவி (64) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவுரி ராஜ் பிரிட்டோ- புனிதா தம்பதியினர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய ரவி தனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கூறி சவுரி ராஜ் – புனிதா தம்பதியினரிடம் ஐந்து லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியது போல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தரவில்லை. இதனால் ரவி தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சவுரி ராஜ்ஜிடம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து சவுரி ராஜ் மற்றும் அவரது மனைவி புனிதா இருவரும் தலைமறை ஆகியுள்ளனர். இதனையறிந்த ரவி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின் போது சவுரி ராஜ் மதுரவாயில், வடபழனி, சூளைமேடு, அயப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த 140 பேரிடம் இதுவரை 3 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்று மோசடி செய்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த சவுரிராஜை கைது செய்த போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.