கட்டுபாட்டை இழந்த லாரி குடிசை வீட்டிற்குள் புகுந்த விபத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மணல் லோடு ஏற்றுக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றது. அங்கு மணலை இறக்கிவிட்டு லாரி திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தென்னவராயன்நல்லூர் சாலை அருகே இருக்கும் குடிசை வீட்டுக்குள் புகுந்தது. இதனால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து ராஜா(45), அவரது மனைவி மீனா(26), மைத்துனர் நேதாஜி(22) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர்.
மேலும் லாரி ஓட்டுனரான ராஜ்குமார்(23), சாலையோரம் நின்று இருசக்கர வாகனத்தில் பால் வியாபாரம் செய்த பாஸ்கரன்(22) ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த 5 பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.