மது அருந்தியவர்கள் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதால் மது அருந்தியவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் தேவையில்லை என்று அரசு அதிகாரி ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் கந்த்வா என்ற மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மது குடிப்பவர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காட்டத் தேவையில்லை என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மதுபானங்களை வாங்க முடியும்.
இதுபற்றி அனைத்து மதுக்கடைகளுக்கும் வெளியிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும். மது குடித்தவர்கள் தடுப்பூசி சான்றிதழ் காட்ட தேவையில்லை. அவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்கிறார்களா என்பதை மட்டும் சொன்னால் போதும். மது குடித்தவர்கள் யாரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதே எங்களது அனுபவம் என்று அவர் கூறியுள்ளார்.