திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும் தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு மது போதையில் தனது மனைவியை துன்புறுத்தியுள்ளார். தன்னையும், தன்னுடைய தாயையும் தினமும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தி வந்ததால் கடும் கோபமடைந்த அசோக், அவரின் தந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்னர் தாமாகவே வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தார்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.