திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்ததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் கோபமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை சோளிங்கர் – பொன்னை நெடுஞ்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் கோரிக்கை குறித்து உயர் அதிகாரியிடம் கூறி ஆவண செய்வதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.