Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் திடீர் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு வெளியிட்ட சட்டத்தின்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்கவேண்டுமெனில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் தொடர்ந்து பலரும் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்துவருகின்றனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படும் ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இன்று மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி, நீதிமன்ற உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே நீரை எடுக்கிறோம். மற்றத் தேவைக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும், குடிநீருக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் ஒப்பிட்டு பார்க்கக் வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1400 கேன் குடிநீர் நிறுவனங்கள் இணைந்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் வாட்டர் கேன் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாட்டர் கேன் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |