புதுக்கோட்டை இடையூரில் கழிவு நீர் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர், எஸ்.பி, மனித உரிமைகள், சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை கிளப்பியது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று இது சம்பந்தமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தினர். மேலும் அந்த பகுதி மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபடவும் நேற்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும், இதனை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை நீதிபதிகள் வேல்முருகன் அமர்வில் முறையிடப்பட்டது.
ஆனால் நீதிபதிகள் இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று காலையில் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து தான் இந்த வழக்கு சம்பந்தமாக தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று அவசர வழக்காக நீதிபதிகள் வேல்முருகன் விஜயகுமார் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள சாராம்சம் என்பது புதுக்கோட்டை கரம்பக்குடி பகுதியில் பழங்குடியின தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தொடர்ந்து தீண்டாமை கொடுமை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போது அதில் உச்சபட்சமாக பயன்படுத்தக்கூடிய தண்ணீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டு இருப்பதால் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது சம்பந்தமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இரட்டைக் குவளை, கோயிலில் அனுமதிக்காதது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது குறித்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை என்பது அங்கு நடைபெற்று வருகிறது என்று பதிலை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் தரப்பில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது மிக முக்கிய பிரச்சனை, குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. எனவே இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமைகள், சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும், அதனை நீதிமன்றத்தில் நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.