சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகர் பகுதியில் கன்னியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு (23) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விமல் ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஏஞ்சல் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது பானுவுக்கு ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அவர் வீட்டில் மகள் ஏஞ்சலுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று திடீரென பானு தன்னுடைய தாயார் கண்ணியம்மாவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏஞ்சலுக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணியமா வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தையின் முகத்தில் சூடு வைத்த தடம் இருந்தது. உடனே கண்ணியம்மா ஏஞ்சலை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு குழந்தையின் உடம்பில் இருந்த காயம் மற்றும் முகத்தில் இருந்த சூடு வைத்த காயம் போன்றவற்றை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் கன்னியம்மாவிடம் விசாரணை நடத்தியதில் மகள் பானு குடிபோதையில் குழந்தையை கொடூரமாக தாக்கி முகத்தில் சூடு வைத்தது தெரிய வந்தது. மேலும் அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பானு மற்றும் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.