குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் சுரேஷ் என்று திருமணம் ஆகாத இரு மகன்கள் இருக்கிறார்கள்.தற்பொழுது டிரைவராக வேலை பார்த்து வரும் கார்த்திகேயன் தினமும் குடித்துவிட்டு வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் கார்த்திகேயன் குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த தம்பி சுரேஷ் அண்ணனை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அண்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொண்டு வந்து சுரேஷ் வெட்டினார். சுதாகரித்துக் கொண்ட சுரேஷ் அண்ணனிடமிருந்து அரிவாளை பறித்து திருப்பி அண்ணனை சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சுரேஷுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவிட்டு, சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.