கோவை உக்கடம் எஸ் எச் காலனி ஹவுசிங் யூனிட் சேர்ந்த ரங்கசாமி கருப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுப்பிரமணி (56) செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கு இடையே பெற்றோர் உயிரிழந்ததால் சுப்ரமணி, செல்வராஜ் மட்டும் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வரும் செல்வராஜ் தனது அண்ணன் சுப்ரமணியனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய செல்வராஜ் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சுப்பிரமணியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது தம்பி என்றும் பார்க்காமல் அவருடைய தலையை தரையில் ஓங்கி அடித்துள்ளார். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத அவர் வீட்டில் இருந்த கயிற்றால் செல்வராஜின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அதன் பின் உடலை வேறொரு பகுதிக்கு எடுத்து சென்று வீச திட்டமிட்டுள்ளார்.
ஆனால் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சுப்ரமணியன் கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கு கோவையில் வெடிகுண்டுகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள சுப்ரமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2500 அபராதமும் விதித்து நீதிபதி டி ஆர் பாலு தீர்ப்பளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல்கள் கார்த்திகேயன் ஆஜராகி உள்ளார்.