கட்டிட தொழிலாளியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்தன்(22) அவரது நண்பர்களான பிரசாந்த்(23), சீனிவாசன்(25), சக்திவேல்(25) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக ஆனந்தன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது சக்திவேலும் பிரசாந்தும் ஆனந்தனுடன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது மேஸ்திரி நன்றாக வேலை பார்த்த ஆனந்தனுக்கு கூடுதலாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சக்திவேலும், பிரசாந்தும் எங்களைப் போல் நீயும் பொறுமையாக வேலை செய். உன்னால் மேஸ்திரி எங்களை அவமானப்படுத்துகிறார் என கூறியுள்ளனர்.
இதனை கண்டு கொள்ளாமல் இருந்த ஆனந்தனை சக்திவேலும் பிரசாந்தும் வேளச்சேரியில் இருக்கும் மற்றொரு கட்டடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் நண்பர்கள் நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் இருந்த ஆனந்தனை அவர்கள் 3-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து பிரசாந்த், சக்திவேல், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.