டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ 30,000 கோடி வருவாய்கிடைத்துள்ளது என்று நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் 3.15 மணிநேரம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்து முடித்தார். பின்னர் பேரவை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்னன் கூறுகையில் , இந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 30,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மத்திய அரசு கொடுக்க வேண்டிய GST வருவாய் மூலம் 12,263 கோடி வரவேண்டியுள்ளது என்று தெரிவித்த நிதித்துறை செயலாளர் அண்மையில் டாஸ்மார்க் மதுபானம் விலை உயர்ந்துள்ளதால் இன்னும் கூடுதலாக அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தார்.