அகில இந்திய குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்வதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.
தமிழகத்தை சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் தமிழக அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு பயிற்சி நிலையங்களிலும் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வின், இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்கான நுழைவுத்தேர்வு நேற்று (பிப் 27) நடைபெற்றது.
மேலும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டின் 18 மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வில் கூடுதலாக வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்காக 30 நிமிடம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.மேலும் இத்தேர்வானது இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் தேர்வு மையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் அவருடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் மற்றும் கல்லூரி அலுவலர்கள் உடனிருந்தனர்.