குடியரசு தினத்தன்று தேசிய கொடியை இறக்க முயற்சி செய்தபோது கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு விடுதியில் உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று மாலை விடுதி காப்பாளர் காஜல், கரன் மற்றும் தியா என்ற மூன்று மாணவிகளை அழைத்து கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள கொடியை இறக்குமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் கொடியை இறக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் சாய்ந்து உயர் மின்னழுத்த கம்பியின் மீது விழுந்தது. இரும்பாலான கொடிக்கம்பம் என்பதால் உடனடியாக கம்பம் முழுவதும் மின்சாரம் பாயத் தொடங்கியது. இதில் கரன் மற்றும் தியா என்ற இரண்டு மாணவிகளும் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஜல் என்ற மாணவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பாதிக்கப்பட்ட மாணவி காஜலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும் உயிரிழந்த இரண்டு மாணவிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.