Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்… சரிந்து விழுந்த மின்கம்பம்… வாலிபர் படுகாயம்…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு தேனி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாகலாபுரம் பகுதியில் உள்ள கண்மாய் நிரம்பி வரத்து வாய்க்கால்களை தாண்டி மழை நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து தாடிச்சேரி, தப்புக்குண்டு, சங்ககோணாம்பட்டி, கொடுவிலார்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களிலும் மழை நீர் தெருக்களில் புகுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. இதே போல் உப்புகோட்டை பகுதியில் பலத்த காற்றுடன் 4 மணிநேரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குச்சனூர் சாலையில் இருந்த தனியார் பள்ளி அருகே இருந்த மின்கம்பம் ஒன்று சரிந்து சாலையின் நடுவே விழுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். இதற்கிடையே அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மாணிக்கராஜ் என்ற இளைஞர் அந்த மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |