Categories
அரசியல் மாநில செய்திகள்

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ – கே. பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் இயற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை மேற்கொண்டுள்ள தடியடி கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேற்று இரவு சென்னையில் அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று இரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இஸ்லாமிய மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து வரும்நிலையில் தமிழ்நாடு அரசு குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு அடக்க முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தமிழ்நாடு அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில் அந்த மாதிரியான எந்த அறிவிப்பும் வராதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதனால்தான் மக்கள் தற்போது தீவிரமாக போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவதற்குள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுதான் தமிழ்நாடு மக்களை அமைதிப்படுத்தும் வழியாகும்” என்றார்.

Categories

Tech |