Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழ்நாடு முழுவதும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழியில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக திருச்சி, தஞ்சை, புதுகோட்டை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, நாகர்கோவில், கோவை, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, கடலூர், மற்றும் திருப்பூர் போராட்டம் நடைபெறுகிறது.

CAA NRC NPR Protest across TN

நாகை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாகை மாவட்டம் கூத்தூர் ஜமாத் சார்பாக கூத்தூரில் இருந்து கீழ்வேளூர் கடைத்தெரு வரை பேரணியாக வந்த மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அதே நிலையில், மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது

தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து மயிலாடுதுறை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CAA NRC NPR Protest across TN

தஞ்சை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகமான தலைமை தபால் நிலையம் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிபடி தங்களது எதிர்ப்புகளை காட்டினர். ஆற்றுப்பாலம் ஜும்ஆ பள்ளிவாசல் பகுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமுமுக,மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாஅத் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

CAA NRC NPR Protest across TN

திருவாரூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்யக்கோரி வலங்கைமான் மேல பள்ளிவாசலில் இருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்ற மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த கண்டன பேரணியை வலங்கைமான் வட்டார ஜமாத் கூட்டமைப்பினர், சி.ஏ.ஏ- என்.ஆர்.சி எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் இணைந்து நடத்தியுள்ளனர். இந்த பேரணியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CAA NRC NPR Protest across TN

திருச்சி

திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டண ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறையைக் கண்டித்தும் கண்டண முழக்கமிட்டனர்.

CAA NRC NPR Protest across TN

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் சின்னப்பா பூங்காவுக்கு அருகில் தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்தும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

CAA NRC NPR Protest across TN

தருமபுரி

தருமபுரியில் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் 100 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

CAA NRC NPR Protest across TN

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் கூடிய 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், சி.ஏ.ஏ., என்.ஆர்.பி., என்.ஆர்.சி., ஆகிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இஸ்லாமிய அமைப்புகள், திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

CAA NRC NPR Protest across TN

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டிபிஐ, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த இதில் பங்கேற்றனர்.

CAA NRC NPR Protest across TN

திருப்பூர்

திருப்பூர் அறிவொளி சாலையில் நேற்று காலை முதல் பெண்கள் குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விடிய விடிய அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

CAA NRC NPR Protest across TN

தேனி

போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்தும், என்.ஆர்.சி, என்.பி.ஆர், சி.ஏ.ஏ உள்ளிட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதவை திரும்பப் பெற வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கம்பத்தில் பழைய தபால் நிலையம் மற்றும் போடியில் திருவள்ளுவர் சிலை ஆகிய பல இடங்களில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

CAA NRC NPR Protest across TN

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஐநூறுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சென்னை – திருப்பதி சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஸ்தம்பித்தது ஆவடி, தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்

CAA NRC NPR Protest across TN

திண்டுக்கல்

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குமரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரில், சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல, குமரி இடலாக்குடியில் மக்கள் இயக்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடியை ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., அமல்படுத்தமாட்டோம் என்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கோரி காமராஜர் சிலை முன்பு திருவண்ணாமலை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்

சேலம் தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள மாநகர உதவி காவல் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். தமுமுக, எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றிருந்தனர். போராட்டத்தில் கைகளில் தேசியக்கொடி மற்றும் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்து பதாகைகளை ஏந்தி, கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் செய்யது அலி தலைமை தாங்கினார். அதே போல, தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று திரண்டு நள்ளிரவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இன்று வேலூர் அண்ணா சாலையில் சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தாம்பரம் பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்டோர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம் பெருங்களத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராடியவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து செய்தனர். பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதே போல சாலை மறியல்கள் நடந்தேறின.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிபிஐ, சிபிஎம், அமமுக, தமுமுக, திமுக, விசிக என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடியை கண்டித்தும் , கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் மத்திய, மாநில அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து கோஷங்களை எழுப்பி 300க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் திடீரென நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

சென்னை

சென்னை மவுண்ட் ரோடு தர்கா, ஆலந்தூர் மெட்ரோ நிலையம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், கிண்டி, சைதாப்பேட்டை, மைலாப்பூர்,தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன.

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர், எழுத்தாளர்கள் கவிஞர்கள் படைப்பாளிகள், சிஏஏ எதிர்ப்பு இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனார். பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் அடுத்தடுத்துப் போராட்டங்கள் தொடர் பற்றிக்கொண்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த எதிர்த்து தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒருபுறம் முழக்கங்கள் எழுப்பப்பட, மற்றொருபுறம் பலரும் தங்களது கருத்தை அங்கு கூடி இருந்தவர்களிடையே ஒவ்வொருவரும் முன்வைத்தனர். இந்த போராட்டங்களில் பங்கேற்ற பலர் தங்களது கைகளில் இந்தியத் தேசிய கொடியை ஏந்தியிருந்தனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்துவரும் போராட்டங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆறு ஐ.பி.எஸ் சிறப்பு அலுவலர்களை நியமித்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |