Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பும் ஏற்படாது: அமித்ஷா உறுதி!

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பலத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளது . குறிப்பாக டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர்.

ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது.

இந்த வன்முறையில் ஒரு தலைமை காவலர் உட்பட 42 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் நாடெங்கிலும் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர் கட்சியினர் பலரும் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். இதனையடுத்து போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன் முறையாக தன்னுடைய நீண்ட மௌனத்தை கலைத்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டத்தை நிலை பற்றிய பொய்யான வதந்திகளை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். இந்த சட்டத்தினால் நம் நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும், யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்றும் அவர் கூறியிருக்கிறார். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் பொது மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபடவும் வைக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |