மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி கண்ணன் காலணியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சாமியை வணங்கி கையில் கயிறு கட்டினால் குடி பழக்கத்தை நிறுத்தி விடலாம் என சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை நம்பி ரவி தனது நண்பர்களான இன்பராஜ், அய்யனார், கார்த்திக் ஆகியோருடன் மதுரையிலிருந்து நாமக்கல்லுக்கு காரில் சென்றுள்ளார்.
இதனையடுத்து வேடந்தூர் அருகே கருப்பம்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கையில் கயிறு கட்டிவிட்டு மது குடித்தால் சாமி குற்றம் ஆகிவிடும். எனவே கடைசியாக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு கட்டிங் அடிக்கலாம் என ரவி கூறியுள்ளார். இதனால் நண்பர்கள் டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றுள்ளனர். பின்னர் குடியை மறக்க கோவிலுக்கு வரும் வழியில் மது குடிக்கலாமா? என மற்றொரு நண்பர் தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு நான்கு பேரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
அதில் ஒருவர் ரவியின் கழுத்தை பிளேடால் அறுக்க வந்துள்ளார். இதனை பார்த்த சிலர் நண்பர்களை விலக்கி விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வந்து நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்து அவர்களை எச்சரித்தனர். தகராறு ஏற்பட்ட போது கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றதால் நண்பர்கள் மதுரைக்கு பேருந்தில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.