திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி மலர்க்கொடி கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 4 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் சரவணகுமாருக்கு 2 வருடங்களுக்கு முன் திருமணமாகி அவரின் குடிப்பழக்கம் மனைவிக்கு பிடிக்காத காரணத்தினால் விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் ஆட்டோ மற்றும் மொபட் திருட்டு தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் அடிக்கடி சரவணனை அழைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனால் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து சென்ற சரவணன் கடந்த 4ஆம் தேதி குடிபோதையில் மந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிரே குடிபோதையில் நடந்து வந்த தந்தை சுப்பிரமணியனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் தகராறு முற்றியதால் சரவணன் தனது தந்தையை காலால் மார்பில் உதைத்து கீழே தள்ளினார். பின்னர் இரும்பு கட்டையால் மண்டையில் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.