மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் உழவர் சந்தை அருகே சென்ற போது நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரசாந்த் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளிசத்யமூர்த்தியிடம் பிரசாந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரசாந்தின் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னை மற்றும் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.