தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட நபர் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதால் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி எவ்வளவு பலனளிக்கக் கூடும் என்று சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சோதனையில் ஒரு பிரிவினருக்கு உண்மையான தடுப்பூசியும் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லாத வேறு ஒரு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோதனையில் பங்கேற்றவர்களுக்கு தங்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதா? அல்லது வேறு மருந்து வழங்கப்பட்டதா? என்பது தெரியாது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் சோதித்துப் பார்த்தால் மட்டுமே அவர்களுக்கு தடுப்பூசி என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிய வரும்.
இந்நிலையில் இந்த சோதனையில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு சோதித்துப் பார்த்ததில் அவருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்ததால், அவருக்கு தடுப்பு மருந்து தான் கொடுக்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த நபர் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏனெனில் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட பத்து நாட்களில் உடல் நலம் பாதிக்கபட்ட அவருக்கு தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரை கண்டுபிடிக்க இயலாமை, அடிக்கடி கோபப்படுவது என பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் அவரது உடல்நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால் 5 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் இந்த சோதனையை உடனே நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த நபர் கூறுகையில், “இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தடுப்பூசி போட்ட இடத்தில் லேசான வலி, காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற லேசான பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்படி கோமா நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் என்று தெரிவிக்கவில்லை. நமக்கு பாதுகாப்பு தான் முதலில் முக்கியம். வேறு யாருக்கும் இது போல ஆகி விடக்கூடாது என்று கூறியுள்ளார்.