தாய்-மகன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கோவிந்தன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிவதேவி தனது தந்தை பரமசிவம், மகன் கோவிந்தசாமி, ஷாமிலி உள்பட 13 பேருடன் இரண்டு கார்களில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது கோவிந்தன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவதேவி மற்றும் ஷாமிலி ஆகிய இருவரும் கோவிந்தனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களும் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரின் சடலங்களையும் மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.