குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்ற பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் நேற்று முன்தினம் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலபுரகி மாவட்டத்திலுள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பீமா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து ஆற்றுப்பாலத்தில் நின்று குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
அச்சமயம் திடீரென ஐஸ்வர்யா ஆற்றில் குதித்துவிட்டார். பின்னர் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் ஐஸ்வர்யாவை தேட தொடங்கினர். அப்போது அவர் குதித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார்.
மகளின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அப்பகுதியில் கூடிய மக்களை கண் கலங்கச் செய்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.