மத்திய பிரதேச மாநிலத்தின் மலை உச்சியில் நின்று செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகே ஜாம் கேட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. அங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு நேற்று குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த 30 வயதுடைய பெண் ஒருவர், மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தடுமாறிய அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், நான்கு மணி நேரமாகப் போராடி அந்த பெண்ணை சடலமாக மீட்டனர்.
அந்தப் பெண்ணின் உடல் முட்புதர் களுக்கு இடையில் சிக்கி இருந்தது. அதனால் உடல் முழுவதிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பெண் இந்தூரைச் சேர்ந்த நீது மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து பெண் உயிர் இழந்ததால், அவரின் குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். இந்த கோர சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.