திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆட்சியடரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நூத்துலாபுரம் பகுதியை சேர்ந்த சின்ன பாண்டியம்மாள்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சின்ன பாண்டியம்மாள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றுள்ளார்.
இந்நிலையில் அந்த ஆவணங்கள் சரியாக இல்லை எனக் கூறி மின்வாரிய அதிகாரிகள் வீட்டிற்க்கான மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் சிரமப்படும் சின்ன பாண்டியம்மாள் மீண்டும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதனையடுத்து போலீசார் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர்.