பொங்கல் திருவிழா கொண்டாடிய வாலிபரை ஊராட்சி துணைத் தலைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது உறவினர்களுடன் சேர்ந்து அரசின் தடையை மீறி பொங்கல் திருவிழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு வந்த ஊராட்சி துணைத் தலைவர் ரவி இதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ரவி தனது நண்பர்களான ராஜ்குமார், சரத்குமார், கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கருப்பசாமி மற்றும் அவரது நண்பரான அருண்குமாரை வழிமறித்து கத்தியால் குத்தி உள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவா, சிவானந்தம், கண்ணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.