சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் புதிதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சுகாதாரத் துறையினர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் அவர்களுடைய வீட்டிற்கு “சீல்” வைக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி சுகாதார அதிகாரி தங்கதுரை தலைமையில் ஊழியர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த பகுதி மக்களை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.