நெல்லையில் மளிகை கடை வியாபாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மளிகை கடை வியாபாரியான பாபு கிஷோர் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கே.டி.சி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இவரது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பாபு கிஷோர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாபு கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற மனைவியும், மகனும் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.