குடும்பத்தகராறு காரணமாக மகனை தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது மனைவி புதுச்சேரியில் அவருடன் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவி என்பதால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சண்டை வந்தபோது இரண்டாவது மனைவியின் மகன் தினேஷ் ஏன் இப்படி அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டு மார்பில் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் வைத்திருந்த கத்தியை எடுத்து மகன் தினேஷின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தினேஷின் உடலை கைப்பற்றி அருகிலுள்ள புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.