தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக. ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் செயல்படுத்துவார்.
திமுக அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். வருவாய்த்துறையை போல பத்திரப்பதிவு துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறையில் முதல் நிலை பணியாளர்கள் ஒரு இடத்திலும் 1 வருடங்களும், 2 ஆம் நிலை பணியாளர்கள் ஒரு இடத்தில் 2 வருடங்களும், 3 ஆம் நிலை பணியாளர்கள் ஒரு இடத்தில் 3 வருடங்கள் மட்டுமே பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வணிக வரித்துறையில் முறைகேடுகள் நடைபெற்றால் அதற்குரிய அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீபாவளி விற்பனை முறைகேடுகளை கண்காணிப்பதற்கு 1,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.